ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.
அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் பின்வரிசை பேட்டர்களின் சரிவு மற்றும் மோசமான ஃபீல்டிங், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத பந்துவீச்சு ஆகியவற்றால் ராஜஸ்தான் அணி தோல்வி அடைய நேரிட்டது. ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கத்தைப் பெற 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியையே பெரிதும் நம்பியிருக்கிறது.
ஆனால் மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. நடுவரிசையில் துருவ் ஜூரல் சிறந்த சில இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் சற்று மந்தமானதாகவே இருந்தது. ஏனெனில் மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருந்தன.
ரியான் பராக் கடந்த சில போட்டிகளில் தனது ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமானால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.
எனினும் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை கவுரவமான முறையில் நிறைவு செய்ய முயற்சிக்கக்கூடும். லக்னோ அணி தனது கடைசி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 188 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 20 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.
மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். இன்றைய போட்டி நடைபெறும் சவாய் மான் சிங் மைதானத்தில் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த 3 ஆட்டங்களிலும் 220 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் முதலில் பேட் செய்யும் அணி பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்த முயற்சி செய்யக்கூடும்.















