முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி பதிவிட்டுள்ளனர்
நாடாளுமன்ற மாநிலங்களவையின் காங்கிரஸ் எம்பியான மன்மோகன் சிங் டிசம்பர் 26 இரவு 9.51 மணிக்கு காலமானார். இவரது உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரிந்தது.
மூச்சுத்திணறல் காரணமாக மன்மோகன் சிங் இரவு 8.00 மணிக்கு டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் கர்நாடகாவின் பெல்காமிலிருந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நாடாளுமன்ற மக்களவையின் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி விரைந்தனர்.
இதனிடையே மறைந்து விட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் குறித்து ராகுல், ‘மன்மோகன்சிங்ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது.
கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு வழிகாட்டி மற்றும் குருவை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிப் பாராட்டிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர்’ எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே தனது இரங்கல் குறிப்பில், ’டாக்டர் மன்மோகன்சிங்ஜி! முன்னாள் பிரதமரான உங்கள் மறைவால், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியையும், மாசற்ற நேர்மைத் தலைவரையும், ஈடு இணையற்ற அந்தஸ்து கொண்ட பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் மறைவிற்காக மத்திய அரசு சார்பில் ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் எந்தவித அரசு விழாக்கள் நடைபெறாது. மன்மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடுகிறது