சமந்தா நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடர், பிரைம் வீடியோவில் வரும் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளம்மூலம் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார், சமந்தா. ஏராளமான கேள்விகள் வந்தன. ஒரு ரசிகர், ‘கொஞ்சம் உடல் எடையை அதிகரியுங்கள்’ என்று கூறியிருந்தார்.
இந்த கேள்விக்கு அதிருப்தி தெரிவித்த சமந்தா, “நான் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது தெரியும். மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி எனது உணவை எடுத்துக்கொள்கிறேன். கடுமையான அழற்சி எதிர்ப்பு உணவை எடுப்பதால் என் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தயவு செய்து மற்றவர்களின் குறைகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நாம் 2024-ல் இருக்கிறோம். வாழு, வாழவிடு” என்று கூறியுள்ளார்.