சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படம் அக்.31-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: என் அப்பா, ஜி.தாஸ் சிறைத்துறை அதிகாரியாக இருந்தவர். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். இந்தப் படத் தில் நடிக்க அவர்தான் முதல் காரணம். கடந்த 21 வருடங்களாக அவர் நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவரை மீண்டும் பார்க்கவும் அவராக நான் இருக்கவும் இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முகுந்த் சாருக்கும் என் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமை.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மாதிரிதான் எனக்கும் நடந்தது. காலையில் என்னிடம் பேசிய அப்பா, ‘லீவு எடுத்திருக்கிறேன். 8 மணிக்கு வந்துவிடுவேன்’ என்றார். நான் வீட்டுக்கு வந்தபோது ஒரே கூட்டம். பிறகு ஐஸ் பாக்ஸில் அவர் உடல் வந்தபோது பயங்கரமாக அழுதேன். அடுத்த நாள் அப்பாவின் எலும்புகளைப் பார்த்தேன். அன்று ஒரு 17 வயது பையனும் நொறுங்கிப் போனான். அப்போது நான் என்ன ஆகப்போகிறேன் என்று தெரியாது. அந்த நொறுங்கிப் போன எலும்புகளை எல்லாம் ஒட்ட வைத்து என் அம்மாவையும் அக்காவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இன்று இப்படியொரு படத்தில் நடித்து, நொறுங்கிப்போன என்னை ஒட்ட வைத்து பாராட்டுகிறீர்கள்.
இங்கே ‘அமரன்’ பட ஹீரோவாக நிற்கவில்லை. சிவகார்த்திகேயனாக நிற்கவில்லை. ஜி.தாஸ் என்கிற சின்சியரான போலீஸ் அதிகாரியின் மகனாக நிற்கிறேன். இந்தப் படத்தில் என் அப்பாவையே பார்க்கும் வாய்ப்பை அமரன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இவ்வாறு நெகிழ்ச்சியாக பேசினார்.
விழாவில் தயாரிப்பாளர் டர்மரிக் மீடியா ஆர்.மகேந்திரன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி, ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.