இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அந்நாட்டு அதிபர் புதினின் வாழ்த்துச் செய்தியையும், இரு தலைவர்களும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டது.
அந்த வாழ்த்துச் செய்தியில், மோடி தனது நாட்டு மக்களிடையே ஆழ்ந்த மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றிருப்பதாக புதின் குறிப்பிட்டுள்ளார். இந்தியா-ரஷ்யா இடையேயான சிறப்பு மற்றும் ராஜாங்க கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மோடியின் தனிப்பட்ட பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் டெல்லி பயணத்தின்போது தனக்கும் தனது குழுவுக்கும் அளித்த சிறப்பான வரவேற்புக்கு புதின் நன்றி தெரிவித்துள்ளார். மோடியுடனான பேச்சுவார்த்தை முக்கியமாகவும் வெளிப்படையாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பிரதமரின் அரசியல் விவேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையையும் அவர் பாராட்டியுள்ளார்.
நட்பு நாடுகளான நமது இரு நாடுகளின் நலனுக்காக இருதரப்பு மற்றும் பன்னாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள் வாழ்த்துச் செய்தியில், தனது நண்பரான பிரதமர் மோடிக்கு நல்ல உடல்நலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான ஆழமான நட்புறவு மேலும் வலுவடைந்து வருவதாகவும், இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளமான எதிர்காலத்துக்காக இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.














