அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்க தடை

0
376

தமிழகத்தில் அரசு திட்டங்களின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் பெயரில் தற்காலிக மின்இணைப்பு வழங்கக் கூடாது என பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அரசு திட்டங்களுக்கான பணிகளை செய்யும் சில ஒப்பந்ததாரர்கள் தற்காலிக மின்இணைப்புக்கான மின்கட்டணத்தை மாதம்தோறும் சரிவர செலுத்துவது இல்லை.

மேலும், அரசு பணி என்பதால் அந்த மின்இணைப்புகளில் மின்விநியோகத்தை அதிகாரிகள் துண்டிப்பது இல்லை. தற்காலிக இணைப்புக்கு செலுத்திய டெபாசிட் தொகையை விட மின்கட்டணம் அதிகம் இருக்கும்பட்சத்தில், பணிகளை முடித்து விட்டு மின்கட்டணம் செலுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் சென்று விடுகின்றனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று நிலுவை கட்டணம் கேட்டால், ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமாறு கூறுகின்றனர். இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, அரசு திட்டப் பணிகளுக்கான தற்காலிக மின்இணைப்பை ஒப்பந்ததாரர்கள் பெயரில் வழங்கக் கூடாது. தற்காலிக இணைப்புக்கு பின் அந்த இணைப்பானது யார் பெயரில் நிரந்தர இணைப்புக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதோ அந்த அதிகாரி பதவியின் பெயரில் தான் வழங்கப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, பிரிவு அலுவலக பொறியாளர்களிடம் அறிவுறுத்துமாறு, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் ஒப்பந்ததாரர்கள் செலுத்தாத மின்கட்டணம் சம்மந்தப்பட்ட அரசு துறையிடம் வசூலிக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Google search engine