பிரயாக்ராஜ் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி

0
34

மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புனித நீராடினார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் புனித நீராடி வருகின்றனர். கடந்த 4-ம் தேதி வரை 38 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அரைல் படித்துறையிலிருந்து படகு மூலம் திரிவேணி சங்கமம் சென்றார். அங்கு காவி உடை, ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர் மோடி, நீரில் மூழ்கி எழுந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இருந்தார்.

சங்கமத்தில் புனித நீராடிய பின்னர், ஆற்றின் நடுவில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதவையில் நின்றபடி ஆரத்தி எடுத்தார். அப்போது பால் மற்றும் பழங்களை ஆற்றில் கொட்டி வழிபாடு நடத்தினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி கூறும்போது, “பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம். சங்கமத்தில் புனித நீராடுவது ஒரு தெய்வீக இணைப்பின் தருணம். இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான பக்தர்களைப் போல நானும் பக்தியின் உணர்வால் நிரப்பப்பட்டேன். அன்னை கங்கா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.

நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here