மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
பிரிட்டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடியின் பாஜக வங்கத்தை வென்றிருக்கிறது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது. பல்வேறு சவால்கள் நிறைந்த மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது மோடி ஆட்சியின் முக்கிய மைல்கல் என்று பிபிசி புகழாரம் சூட்டி உள்ளது. பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் நாளிதழ், “மோடியின் பாஜக மேற்குவங்கத்தில் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், “எதிர்க்கட்சியின் கோட்டையை பாஜக கைப்பற்றி உள்ளது’’ என்ற தலைப்பில் விரிவான செய்தியை வெளியிட்டிருக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்று அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியிருக்கிறது.வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், “முக்கிய மாநிலமான மேற்குவங்கத்தை பாஜக வென்றிருக்கிறது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தானின் டான், வங்கதேசத்தின் டாக்கா டிரிபியூன் ஆகிய நாளிதழ்களும் மேற்குவங்கத்தில் பாஜக அபார வெற்றி பெற்றிருப்பதாக செய்திகளை வெளியிட்டு உள்ளன. அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் நேற்று கூறும்போது, “வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை (மேற்குவங்கம்) பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்’’ என்றார்.
