வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயலின் தாக்கம் காரணமாக, ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது.
ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட ‘அர்னாப்’ புயல் தாக்கத்தால் ரூ.4,600 கோடி இழப்பு ஏற்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், அர்னாப் புயலுக்கு மின்சாரம் தாக்கியும், சுவர்கள் இடிந்து விழுந்தும் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீரமைப்பு பணிகள் முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் சமயத்தில், அடுத்ததாக மேற்கு மத்திய வங்க கடலில் ஏற்பட்ட குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு ‘முரசு’ என பெயர் வைக்கப்பட்டது. இப்புயல் மீண்டும் ஆந்திராவின் பக்கம் திசை திரும்பியது. நெல்லூர்-நர்சாபூர் இடையே ஓங்கோல் அருகே ‘முரசு’ புயல் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என விசாகப்பட்டின வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, நெல்லூருக்கு 80 கி.மீ தூரத்திலும், காவலிக்கு 90, திருப்பதிக்கு 160, ஓங்கோல் 120, பாபட்லா 150 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து சென்றது. முரசு புயல் நள்ளிரவு கரையை கடக்கும் போது மணிக்கு 100 – 120 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் விசாகப்பட்டின வானிலை மையம் எச்சரித்திருந்தது.
முரசு புயலால் நேற்று காலை முதலே ஆந்திராவின் நெல்லூர், பாபட்லா, பிரகாசம், குண்டூர், திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தொடர் மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்தது. மாலைக்கு பின்னர் நெல்லூரில் இருந்து பாபட்லா வரை பலத்த காற்று வீசத்தொடங்கியது.
நெல்லூர், பாபட்லா, பிரகாசம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. முரசு புயல் காரணமாக நேற்று விஜயவாடா-கூடூரு, கூடூரு-விஜயவாடா, குண்டூர்-தெனாலி, தெனாலி-ரேபல்லே, மார்க்கப்பூர் ரோடு-தெனாலி, தெனாலி, குண்டூர் ஆகிய 7 ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ரத்து செய்துவிட்டது.
