திருச்சியில் காணாமல் போன இளைஞரை முக அடையாள தொழில்நுட்பம் மூலம் போலீஸார் சென்னை மெரினாவில் மீட்டுள்ளனர்.
அண்ணா சதுக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், முதல்நிலைக் காவலர் நாகேந்திரன் ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். போலீஸாரின் கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து, அவரை காவல்துறையின் எப்ஆர்எஸ் எனப்படும் முக அடையாளத் தொழில்நுட்பம் (Face Recognition System) மூலம் சோதனை செய்தனர்.
இதில், அவர் திருச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என்பதும், கடந்த ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் பதிவான ‘ஆண் காணவில்லை’ வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி கீழவயலூர் பகுதியில் செயல்படும் தனியார் காப்பகத்தில் தங்கி இருந்துள்ளார். அங்கிருந்து கடந்த 1.11.2025 அன்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காப்பக ஊழியருடன் சென்றபோது மாயமானது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அவர் சென்னையில் உள்ள ‘கருணை உள்ளங்கள்’ அமைப்பினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் (25-ம் தேதி) திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாரிடம் அவர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.
எப்ஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணாமல் போனவரை விரைந்து கண்டு பிடிக்க உதவிய தலைமைக் காவலர் சரவணன், முதல் நிலைக் காவலர் நாகேந்திரன் ஆகியோரை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
மெரினாவில் சிறுவன் மீட்பு
சென்னை மெரினா கடற்கரையில் போலீஸார் கடந்த 25-ம் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு சிறுவன் அவர்களிடம் வந்து வாய்பேச முடியாததுபோல சைகை காட்டி, பணம் கேட்டார்.
போலீஸார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தியதில், சிறுவன் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த 13 வயதான 8-ம் வகுப்பு மாணவன் என்பது தெரியவந்தது.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன், உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு ரயில் மூலம் முதலில் திருச்சிக்கும், அங்கிருந்து சென்னைக்கும் வந்துள்ளார்.
சென்னையில் சுற்றித் திரிந்த நிலையில், கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் வாய்பேச முடியாதவர் போல நடித்து மக்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார் என்றும் தெரிந்தது. இதையடுத்து, தென்காசி மாவட்ட போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் சிறுவன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
எப்ஆர்எஸ் என்றால் என்ன?
எப்ஆர்எஸ் (Face Recognition System) என்பது ஒருவரின் முகத்தை கேமரா மூலம் பதிவு செய்து, காவல்துறையின் தரவுத்தளத்தில் ஏற்கெனவே உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அந்த நபரின் அடையாளத்தை கண்டறிய உதவும் தொழில்நுட்பமாகும்.
குறிப்பாக காணாமல் போனவர்கள், தேடப்படும் நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாதவர்களை கண்டுபிடிப்பதில் இந்த தொழில்நுட்பம் காவல்துறைக்கு மிக உதவியாக உள்ளது.















