கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு குளிரூட்டும் நவீன கண்ணாடிகளை (சன்கிளாஸ்) காவல் ஆணையர் அருண் நேற்று வழங்கினார்.
வெளிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், களத்தில் நின்று பணி செய்யும் போக்குவரத்து போலீஸார் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, வெயிலை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு தினமும் 2 பாக்கெட் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக போக்குவரத்து போலீஸார் 1,500 பேருக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குளிரூட்டும் கண்ணாடிகளை போக்குவரத்து போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் நேற்று வழங்கினார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இணை ஆணையர் பண்டி கங்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள குளிரூட்டும் கண்ணாடிகள் நீடித்து உழைக்கக் கூடியவை மற்றும் குறைந்த எடை கொண்டவை. தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளி பாதிப்பிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
அதோடு மட்டும் அல்லாமல் தெளிவான புலக் காட்சி திறனைக் கொண்டுள்ளது. மேலும், பணி நேரத்தில் அணிய வசதியாகவும் உள்ளது. சூரிய ஒளியில் தொடர்ந்து பணிபுரிவதால் போக்குவரத்து காவலர்களுக்கு கண் பிரச்சினைகள், வெயில் பக்கவாதம், தலைச்சுற்றல் போன்ற பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றைச் சமாளிக்க, சென்னை போக்குவரத்து காவல் துறையால், இந்த சன்கிளாஸ் வழங்கப்பட்டுள்ளன. சன்கிளாஸ் ஒன்றில் விலை ரூ. 1,990” என்றனர்.