‘துருவ நட்சத்திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம், ‘துருவ நட்சத்திரம்’. நிதிப்பிரச்னை தொடர்பாக, பைனான்சியர்கள் புண்ணியமூர்த்தி, பிரேம் குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், இப்படத்தை வெளியிட கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி அளித்து, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தார். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, புண்ணிய மூர்த்தி, பிரேம் குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், திலகவதி அடங்கிய அமர்வு விசாரித்தது. ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதியளித்த உத்தரவை எதிர்த்த அவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இந்த மனு மீது ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.
