நாட்டை பிரிக்க நினைப்பவர்களுக்கு மகாராஷ்டிர தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர் என பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்திலிருந்து நேற்று டெல்லி புறப்பட்ட பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மோடி, மோடி என முழக்கமிட்டத்தை பார்க்க முடிந்தது. அவர் நாட்டைப் பாதுகாக்க பிறந்தவர், வெல்ல முடியாத தலைவர். உலகின் உயர்ந்த தலைவர்.
மகாராஷ்டிர மக்கள் வளர்ச்சிக்காகவும் நிலையான அரசு அமைவதற்காகவும் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலில் நாட்டை பிரிப்பது குறித்து பேசிவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் கங்கனா ரனாவத்துக்கு சொந்தமாக உள்ள பங்களா விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதன் ஒரு பகுதி கடந்த 2020-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அப்போது உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.