மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களுக்கு நல்ல செய்தி வரும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் நேற்று ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்தார். அவர் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளது. மாநில அரசின் அனுமதியின்றி, முக்கிய கனிமங்களுக்கான உரிமங்களை மத்திய அரசு ஏலம் விடக்கூடாது
என்று கடந்த 2023 அக்டோபர் 3-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியும், மத்திய அரசு ஏல நடவடிக்கை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.
டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரை கோயில்கள், சமண சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துகள், பஞ்சபாண்டவர் படுக்கைகள் போன்ற பல வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இப்பகுதியை பல்லு
யிர் பெருக்க தலமாக தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தது. இதை சுட்டிக்காட்டியும்கூட, அந்த பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுஉரிமம் அளித்துள்ளதை தமிழக அரசும், மக்களும் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு காரணமாக, இதை எதிர்த்து பல போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இந்த பகுதி மக்களையும் பாதுகாக்கும் நோக்கில், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமரை முதல்வர் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனே ரத்து செய்யவும், மாநில அரசுகளின் அனுமதி இன்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்க கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி இந்த பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கடும் விவாதத்துக்கு பிறகு, தனி தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். உறுப்பினர்கள் அசோகன் (காங்
கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விசிக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்), சதன் திருமலை குமார் (மதிமுக), வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதைத் தொடர்ந்து நடந்த வாதம்:
நயினார் நாகேந்திரன் (பாஜக): மாநில அரசிடம் மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் இதுகுறித்து விளக்கம் கேட்டது. அப்போதே, ‘இது வேண்டாம்’ என்று சொல்லி இருக்கலாம். ஆனால், அக்டோபரில்தான் முதல்வர் கடிதம் எழுதுகிறார். இவ்வளவு காலம் ஏன்?
அமைச்சர் துரைமுருகன்: மத்திய அரசின் சட்டத் திருத்தம் வந்த உடனே 2023 அக்டோபர் 3-ம் தேதி மத்திய சுரங்க அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், ‘நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த சட்டம் மாநில அரசின் உரிமை களை பறிப்பதுபோல ஆகிறது. சுரங்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தேன்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தவுடன், அந்த இடத்தில் பல்லுயிர்பெருக்கம் உள்ளிட்ட முக்கியத்துவங்களை எல்லாம் சுட்டிக்காட்டி, சுரங்கத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று அந்த கடிதத்திலேயே தெரிவித்தோம். நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறோம்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): எந்த வகையிலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது. எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக பாஜகவின் நோக்கம். ஏற்கெனவே, நாங்களும் மத்திய அமைச்சரிடம் பேசியுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின்: தீர்மானத்தை நீங்கள் ஏற்கிறீர்களா, இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
நயினார் நாகேந்திரன்: மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நல்ல செய்தி வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.
ஜி.கே.மணி (பாமக): இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். மக்களுக்கு எதிரான இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.