குமரி மாவட்ட மேற்கு எல்லையான பனச்சமூடு அருகே வெள்ளறடை தென் குருசுமலையின் 68வது திருப்பயணம் கடந்த 30ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரம் உள்ள மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள சிலுவையை வணங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் திருப்பயணம் மேற்கொண்டு வந்தனர். தென் குருசுமலையின் முதற்கட்ட திருப்பயணம் நேற்று மாலை நிறைவு பெற்றது. இந்த திருப்பயணத்தில் லட்சக்கணக்கான தமிழக கேரள பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 13ம் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியும், 18ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு தரை மட்டத்தில் இருந்து மலை உச்சி வரை சிலுவைப்பாதை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். திருப்பயண நிகழ்ச்சியில் ஆறுகாணி மற்றும் கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.