Home உலக செய்திகள் பாக். – ஆப்கன் எல்லையில் மோதல் தீவிரம்: காபூல் மீது வான்வழி தாக்குதல்

பாக். – ஆப்கன் எல்லையில் மோதல் தீவிரம்: காபூல் மீது வான்வழி தாக்குதல்

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் அந்நாட்டின் இரண்டு மாகாணங்கள் மீது வெள்ளிக்கிழமை அன்று வான்வழி தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு வியாழக்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் வானூர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் உடன் போரை அறிவித்துள்ளார்.

போர் பிரகடனம்: “எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது. இப்போது எங்களுக்கும் உங்களுக்கும் நேரடி போர்” என எக்ஸ் சமூக வலைதளத்தில் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: காபூல் நகரில் மூன்று இடங்களில் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல கந்தஹர் மற்றும் பாக்டிகா பகுதியிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது என ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் வியாழக்கிழமை இரவு தங்கள் தரப்பில் தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை கைப்பற்றியதாக அவர் கூறினார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதில் பெண்கள், குழந்தைகள் என பலர் உயிரிழந்தனர்.

பாக். – ஆப்கன் மோதல்: சமீப காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல்​கள் அதி​கரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version