Home உலக செய்திகள் ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஜெர்மனியில் 450 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0

ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு இன்று (நவ. 23) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி முழுவதும் 450 பள்ளிகளுக்கு இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான ஃபிரைபர்க் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை தொடர்புகொள்ளப்பட்ட பள்ளிகளுக்குக் குறிப்பிட்ட எந்தவொரு அச்சுறுத்தலும் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.

தலைநகர் பெர்லின் காவல் துறையும் இதே கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில், துரிங்கியா மாகாணக் காவல் துறை வெளியிட்டுள்ள தனி அறிக்கையில், மிரட்டல் விடுத்தவர்களின் நோக்கம் எந்தவொரு தாக்குதலையும் நடத்துவது அல்ல என்றும், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், டென்மார்க் நாட்டிலும் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து அந்நாட்டுக் காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தற்போதைய சூழலில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என டென்மார்க் காவல் துறையும் உறுதி அளித்துள்ளது.

சமீப காலமாக ஐரோப்பா முழுவதும் உள்ள பள்ளிகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், விமான நிலையங்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியான புரளிகளும் இணையவழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக கடந்த வாரம் ஸ்பெயினில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், இம்மாத தொடக்கத்தில் இத்தாலியில் ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version