சிவகாசி பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே வெடி விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழக அரசின் நிர்வாக கவனிப்பின்மை காரணமாகவே, சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இனியாவது பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவிலான சிறப்புக்குழுவை அரசு நியமிக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும் பட்டாசு ஆலை விபத்துக்களை கண்டுகொள்ளாத திமுக அரசுக்கு கடும் கண்டனம். இனிமேலாவது பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளாததன் விளைவாகவே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற விபத்து கள் நிகழாமலிருக்க ஆய்வு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், பட்டாசு ஆலைகளை முறைப்படுத்தி அவற்றை ஆய்வு செய்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோ ரும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளனர்.