எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

0
122

எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக அமெரிக்க அரசு உயர்த்தியது. இந்த புதிய கட்டண முறை நேற்று (செப்.21) முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண விதிகள் குறித்து முதல் நாளில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், அமெரிக்காவின் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தின.

இந்நிலையில், கட்டண விதிமுறைகள் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையின் ஊடகத் துறை செயலர் கரோலின் லீவிட் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஏற்கெனவே பெற்றவர்களுக்கு விலக்கு எச்1பி விசா கட்டணத்தை ஆண்டுதோறும் செலுத்த தேவையில்லை. இது ஒருமுறை கட்டணம் மட்டுமே. ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த தேவை இல்லை. அதேபோல, வெளிநாட்டு ஊழியர்கள் தாய்நாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பினாலும் கட்டண உயர்வை செலுத்த அவசியம் இல்லை. புதிதாக எச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வு பொருந்தும். தற்போதைய எச்1பி விசாவை பழைய கட்டண விகிதத்திலேயே புதுப்பித்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘‘தாய்நாட்டுக்கு சென்றுள்ள எச்1பி விசாதாரர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டிய அவசியமில்லை. புதிய கட்டண உயர்வில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை சார்பில் அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘எச்1பி விசா தொடர்பான புதிய ஆணையில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கெனவே எச்1பி விசா பெற்றவர்களுக்கு புதிய ஆணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிதாக எச்1பி விசா கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு புதிய ஆணை பொருந்தும். புதிய ஆணையின் விதிகளை அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here