உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்தைக்கு மறுத்து பரஸ்பரம் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகின்றன. சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்ந நிலையில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள இந்திய நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். ஆலையில் இருந்து கரும் புகை மண்டலம் எழும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டித்ததோடு, உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். குசும் ஹெல்த் கேர் நிறுவனம் 1994-ல் உக்ரைனுக்கு இந்திய மருந்துகளை ஏற்றுமதி செய்யும் ஒரு விநியோகஸ்தராக தொடங்கப்பட்டது.
2002-ல், அது மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, தனது சொந்த பிராண்டுகளை சந்தைப்படுத்தத் தொடங்கியது. பின்னர் அது உற்பத்தித் துறையில் இறங்கி, 2007-ல் இந்தியாவிலும், 2009-ல் உக்ரைனின் சுமி நகரிலும் ஆலைகளைத் திறந்தது.
ரூ.400 கோடி இழப்பு
இந்நிறுவனம் பொதுவான வகையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மருந்துகளை தயாரித்து, அவற்றை உக்ரைன், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்பட 9 நாடுகளில் விற்பனை செய்கிறது. தற்போது இந்நிறுவனம் இந்தியரான ராஜீவ் குப்தா என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்கி வந்த இந்த மருந்து ஆலை தற்போதைய ட்ரோன் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.400 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
