கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச எஸ்எம்எஸ்: தவெக எம்எல்ஏ கைதாகிறார்? – விசாரணை அதிகாரிகள் நியமனம்

0
56

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றவியல் ரீதியாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, ஆட்சியரின் இல்லத்துக்குள் அத்துமீறி சென்று தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் அறிக்கை கோரியுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆட்சியரின் கண்ணியம் மற்றும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைப் பத்திரப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜரானார். அப்போது வழக்கறிஞர் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றவியல் ரீதியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறி அதற்கான எப்ஐஆர் நகல் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்து தொடர்பான எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதைப் படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘இந்த எப்ஐஆரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். தூய்மைப் பணியாளர் முதல் தலைமைச் செயலர் வரை யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான ஆபாசமான பதிவுகளைச் சமூகவலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டுமென ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டும் ஏன் இந்த வழக்கு தொடர்பான பதிவுகளை இன்னும் நீக்கவில்லை? பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழுக்கள் அமைக்காதது ஏன்? இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி யார்?’’ என்று அரசு தரப்புக்குச் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல் துறை தரப்பில், ‘‘கள்ளக்குறிச்சி எஸ்.பி.தான் வழக்கை விசாரித்து வருகிறார்’’ என்று தெரிவி்க்கப்பட்டது. அப்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி வழக்கறிஞர் நாகஷைலா கோரினார்.

அதற்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன், ‘‘மாவட்ட ஆட்சியர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தரப்பில் வழக்கறிஞர் எங்கே? இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயற்சித்து தமிழக அரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்’’ என்றார். அதன் பின்னர் நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

இந்த விவகாரம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. அப்போதே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்காது. எனவே, இந்த வழக்கை கள்ளக்குறிச்சி எஸ்.பி.க்குப் பதிலாக வேறு அதிகாரிக்கு மாற்றி, ஐஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி கண்காணிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் வரை அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆர் குறித்த விவரங்களையோ, அவரைத் தொடர்புபடுத்தியோ அல்லது அவரை அடையாளப்படுத்தியோ எந்த பதிவுகளையும், தகவல்களையும், புகைப்படங்களையும் பொதுவெளியில் யாரும் வெளியிடவோ, பகிரவோ கூடாது. இந்த உத்தரவை மீறி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல ஏற்கெனவே சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் தொடர்பாக உள்ள பதிவுகளை உடனடியாக நீக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை யாரும் தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போலீஸார் விரைவாக விசாரணை நடத்தி டிச.22-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கு விசாரணை நவ.27-க்குத் தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங்கும், விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நிர்வாக ஐ.ஜி. காமினியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் நீதிபதி வி.லட்சுமி நாராயணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிதான நிலையில், தவெக எம்எல்ஏ அருள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்எல்ஏ மீது 5 பிரிவுகளில் வழக்கு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடம் மாவட்ட ஆட்சியர் முறையான புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு நேற்று காலை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீஸார் சென்றனர். அவர்கள் அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர். இந்நிலையில், ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஷானாஸ் முகாமிட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன் மற்றும் வருவாய் வட்டாட்சியர் சேகர் மற்றும் ஆட்சியரின் காவலர் உள்ளிட்டோரிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.ஸ்டோக்ஸ் முதல் ஆர்யவீர் சேவாக் வரை: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 1,220 வீரர்கள் விருப்பம்

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here