Home மாநில செய்திகள் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஐக்கியம்

0

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மன மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும், ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்.

அரசியலில் சர்வாதிகாரமாக ஆணவப் போக்கோடு நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் இனி வெற்றிபெற முடியாது எனும் சூழலை அதிமுகவுக்கு உருவாக்கியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். ஓர் அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகள் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது. அடித்தட்டு, ஏழை எளியவர்கள், பெண்கள் மன மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியில் உள்ளனர். அண்ணா, கருணாநிதி எப்படி அனைத்து கட்சிகளையும் தாயுள்ளத்தோடு சட்டப்பேரவையில் அணுகினாரோ, அதே பாணியில் முதல்வர் ஸ்டாலினும் செயல்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைப் பண்பு இல்லை. தென் மாவட்டங்களின் எந்தவொரு தலைவரும் வளர்ந்துவிடக் கூடாது என எடப்பாடி பழனிசாமி பழனிசாமி நினைக்கிறார். அவ்வாறு அதிமுகவில் தென் மாவட்டங்களில் வளரும் தலைவர்களை பழனிசாமி அழித்து வருகிறார். பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது.

கடந்த காலங்களில் அதிமுகவில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் பாதிக்கப்பட்டேன். அனைவரையும் அரவணைக்கும் போக்கு இப்போது அதிமுகவில் இல்லை. அதனால், எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன்.

வரும் தேர்தலில் திமுக மீண்டும் வென்று ஆட்சியமைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும். நான் சரியான முடிவை எடுத்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். திமுக தீயசக்தி என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ் கடந்து வந்த பாதை:

75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 முதல் அதிமுக-வில் இருந்தவர். முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.

அதிமுகவில் வெடித்த ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வைத் தொடங்கி தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். தனிக் கட்சி தொடங்கினால், ‘அதிமுகவுக்கும் உனக்கும் இனி சம்பந்தமில்லை’ என்று சொல்லி ஒரேயடியாய் கதவை இழுத்து மூடிவிடுவார்கள் என்று நினைத்த ஓபிஎஸ், தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டே அதிமுகவுக்குள் அடைக்கலமாக தூது அனுப்பிக் கொண்டே இருந்தார்.

ஆனால், “எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத் தயாராய் இருக்கிறேன்” என்று அவர் சொன்ன பிறகும் கூட ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க சம்மதிக்கவே இல்லை இபிஎஸ். இந்த விஷயத்தில் தனக்கு கைகொடுப்பார்கள் என ஓபிஎஸ் பெரிதும் நம்பிய பாஜக தலைவர்களும் அவரை கைவிட்டுவிட்டதால் என்டிஏ-வில் இருந்து வெளியேறினார்.

இதனிடையே, இனியும் இவரை நம்பிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்ற முடிவுக்கு வந்த அவரது விசுவாசிகளில் சிலர் திமுக பக்கம் சத்தமில்லாமல் செட்டிலானார்கள். இன்னும் சிலர் தாய்க் கழகத்திலும் தவெக-விலும் தஞ்சமடைந்தார்கள். இந்த நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளன்று, “இனி நான் என்ன சங்கர மடத்துக்கா போவேன்?” என்று போடியில் கூட்டம் கூட்டி விரக்தியுடன் விம்மினார் ஓபிஎஸ்.

இதற்கு நடுவே மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போதே சர்ச்சைகள் வெடித்ததால் சிறிது காலம் அமைதிகாத்தவர், அண்மையில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததுடன், “ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது; மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும்” எனப் பேட்டியும் கொடுத்தார் ஓபிஎஸ். அவரது ஆதரவு எம்எல்ஏ-வான உசிலம்பட்டி ஐயப்பனும், “ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வேண்டும்” எனச் சட்டமன்றத்தில் வாழ்த்தி முழங்கினார்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, “ஓபிஎஸ்ஸை சேர்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தால் இபிஎஸ் கூட்டணியை விட்டுப் போய்விடுவார் என பயந்தே அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை. ‘மூன்று முறை முதல்வராக இருந்த நான், இப்போது ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்குச் செல்வது சரியாக இருக்காது’ என்று சொல்லி விஜய் பக்கம் போகவும் ஓபிஎஸ் மறுத்துவிட்டார். அதன்பிறகே திமுக தரப்புடன் பேச்சுவார்த்தை தீவிரமானது.

கட்சியில் இணைந்தால் உரிய மரியாதை அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்த திமுக தலைமை, ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கும் வாய்ப்பளிக்கலாம் எனச் சொன்னது. அதனால்தான் முதலில் தனது விசுவாசிகளை அனுப்பிவிட்டு இப்போது அவரும் இணைந்துள்ளார்” என்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version