கரோனா பரவலின்போது பாசஞ்சர் ரயில்களுக்கு பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவை வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் 296 பாசஞ்சர் ரயில்களின் எண்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றப்படுகின்றன.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக பாசஞ்சர் ரயில்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்கள் ஓடுகின்றன.
இந்த ரயில்கள் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவலின்போது பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்ணுடன் பாசஞ்சர் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. சிறப்பு விரைவு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதாவது, குறைந்தபட்ச கட்டணமே ரூ.30 ஆக இருந்தது. இந்த ரயில்களை வழக்கமான பாசஞ்சர் ரயில்களாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, குறுகிய தூரம் இயக்கப்படும் சாதாரண பாசஞ்சர் ரயிலின் கட்டணம் கடந்த பிப்ரவரியில் குறைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மெமு, பாசஞ்சர் ரயில்களில் 2-ம் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. ஆனால், பாசஞ்சர் ரயில்களின் எண்கள் அப்போது மாற்றப்படவில்லை.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் 288 பாசஞ்சர் ரயில்கள், நீலகிரி மலை ரயில் பாதையில் ஓடும் 8 பாசஞ்சர் ரயில்கள் என பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண் கொண்ட 296 ரயில்களின் எண்கள், வழக்கமான ரயில் எண்களாக மாற்றப்பட உள்ளன. சென்னை எழும்பூர் – புதுச்சேரி, சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘ரயில் புறப்பாடு, வருகை நேரம், புறப்படுகிற, சேருகிற இடங்கள், நிற்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய ரயில் எண் அவசியம். கரோனா காலத்தில் சிறப்பு பாசஞ்சர் ரயில் எண் வழங்கப்பட்டிருந்தது. தற்போது முறைப்படுத்தி, வழக்கமான ரயில் எண் வழங்கப்பட உள்ளது’’ என்றனர். இந்த மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணையில் இந்த புதிய எண்கள் இடம்பெறும்.