பாமக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் செயல்படுவார். அவரது நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரம், அன்புமணியுடனும் எந்த பிரச்சினையும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் நேற்று கூறியதாவது: ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக கருதப்பட்ட தமிழக காவல் துறை, முதல்வரின் திறமையின்மையால் தனது செயல்பாடுகளை முற்றிலும் இழந்துவிட்டது. வேங்கைவயல் விவகாரம், நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை, திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை என பல சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. முதல்வர் காவல் துறை ஆய்வு கூட்டங்களை நடத்துவதுடன், சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கடைகளை கண்டறிந்து மூடவேண்டும். ஆளும் திமுக அரசு தங்களது தவறுகள், தோல்விகளை மறைப்பதற்காக, ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து, அடக்குமுறையை கையாள்வது கண்டிக்கத்தக்கது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகளிடம் உதவிபெறும் முடிவை அரசு கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தனி ஆணையம் அமைத்து, முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவதில் தவறு இல்லை. ஆனால், அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைத்து, அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தனியார் நிர்வாகங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளுவதை ஏற்க முடியாது.
400 கிராம ஊராட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கிராம மக்களிடம் எதிர்ப்பு உருவாகியுள்ளது. நகர விரிவாக்கம் என்ற பெயரில், கிராம ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க கூடாது. பாமக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் செயல்படுவார். அவருக்கு உரிய முறையில் நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரம், அன்புமணியுடனும் எந்த பிரச்சினையோ, கருத்து வேறுபாடோ இல்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தரும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.