மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் அதிகாரிகள் நேற்று 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பொது வெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம், காவல் துணை ஆணையர்கள் புக்யா சினேகா பிரியா (சென்னை அண்ணா நகர்), அய்மன் ஜமால் (ஆவடி), பிருந்தா (சேலம்) ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதையடுத்து, கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் அதிகாரிகள் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்று விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக பல்கலைக்கழக நிர்வாகிகள், ஊழியர்கள், காவலாளிகள், பணியாளர்களிடம் அவர்கள் விசாரித்தனர். மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். மாணவியின் பெற்றோர், பாதிப்புக்கு உள்ளான மாணவி, சம்பவத்தன்று மாணவியுடன் இருந்த மாணவர் உள்ளிட்டோரிடமும் நடந்த சம்பவத்தை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 139 கேமராக்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளன, அவற்றில் எத்தனை கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன என்பது உள்ளிட்ட தகவல்களையும் சேகரித்துக் கொண்டனர். பின்னர், மதியம் 3.30 மணி அளவில் விசாரணையை முடித்துக்கொண்டு திரும்பினர். கிடைத்த தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். தேசிய மகளிர் ஆணையத்தை சேர்ந்த உண்மை கண்டறியும் குழுவினர் கடந்த செவ்வாய்க்கிழமை, அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செல்போனில் ஆய்வு: இதற்கிடையே, ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றிய செல்போனை சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் எத்தனை வீடியோக்கள் இருந்தன, அதில் எத்தனை அழிக்கப்பட்டது, யாருக்கு பகிரப்பட்டது என்று தீவிர ஆய்வு நடந்து வருகிறது. 6 மாத அழைப்பு விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.