நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டிருந்த பேரணியை கை விடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட சிறப்பு அதிகாரமான அரசியல் சாசனப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எப்ஐஆர் களையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டெல்லி, பிஹார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 20 முதல் 25 வரை நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அனைத்தும் அரசியல் சாசனப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டனர்.
மேலும், பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட இதேபோன்ற எப்ஐஆர்கள் மீதும் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்றும், இந்த போராட்டங்கள் தொடர்பாக புதிய எப்ஐஆர்களைப் பதிவு செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டனர். அதேநேரம் தீவிரக் குற்றங்களில் ஈடுபட்ட 2,873 நபர்கள் மீது டெல்லி காவல் துறை ஒரே புதிய எப்ஐஆர் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்தனர்.
மேலும், நீட் 2026 தேர்வு குளறுபடியால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அகில இந்திய அளவிலான கொள்கையை மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேவேளையில் இந்த உத்தரவானது சிறப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு பிரிவு 142-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இதனை எதிர்கால வழக்குகளில் முன்மாதிரியாகப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அப்போது, சிஜேபி சார்பில் அதன் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மற்றும் மத்திய அரசின் உறுதிமொழியை ஏற்று செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடத்தத் திட்டமிட்டிருந்த அமைதிப் பேரணியைத் திரும்பப் பெறுவதாகக் தெரிவித்தார். அதற்கு தலைமை நீதிபதி, “இரு தரப்பின் இந்த இணக்கமான முடிவை வரவேற்கிறோம். இருதரப்பும் இணைந்து செயல்பட்டால் எந்தவொரு சிக்கலான பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்” என குறிப்பிட்டார்.















