நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக சட்டப்பேரவையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழக மக்களின் எண்ணங்களையும் பேரவையின் தீர்மானங்களையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தில் நாம் எடுக்கவேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டவல்லூநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும். அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அதன்படி, நீட் தேர்வு தொடர்பான சட்டப்பேரவை கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை சட்டமாக்கி, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இன்று வரை 3500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் பயின்று வருகிறார்கள். அதிமுக அரசு மேற்கொண்டது போன்று நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இருமுறை சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திமுகவின் இரட்டை வேடத்தால் நீட் நுழைவு தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாது என்ற மன வருத்தத்தில் இதுவரை சுமார் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர். நீட் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்? 2026-ல் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடக்க இருப்பதால், மக்களை சந்திக்க வேண்டிய நிலையில், 4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரிசெய்வதற்காக சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தால் எவ்வித தீர்வும் ஏற்பட போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.