ஓமனில் வீட்டு வேலை பார்க்கும் இந்தியப் பெண்கள், சித்திரவதை, சுரண்டல், சம்பளம் வழங்கப்படாதது போன்ற இன்னல்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார் எழுகிறது.
இத்தகைய இன்னல்கள் காரணமாக பணியிலிருந்து வெளியேறிய பெண் தொழிலாளர்கள் மஸ்கட் நகரில் இந்திய தூதரக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் சமீபத்தில் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
அவர் அளித்த புகாரில், ‘‘நல்ல சம்பளம் தருவதாக கூறி தன்னை வீட்டு வேலைக்கு மஸ்கட் அழைத்து வந்ததாகவும் ஆனால் தினமும் 12 முதல் 15 மணி நேரம் பல வீடுகளில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தினர். மேலும் போதிய உணவு வழங்காமல் தாக்கினர். எனது செல்போனை பறித்தனர்’’ என கூறியிருந்தார்.
இதுகுறித்து மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “முதலாளிகளின் வீடுகளை விட்டு வெளியேறிய மற்றும் முதலாளிகளால் கைவிடப்பட்ட இந்தியப் பெண் தொழிலாளர்களை இந்திய தூதர் பிரஷாந்த் பிசே, தூதரக விடுதியில் சந்தித்தார்.
அப்போது அவர்களின் புகார்களை கேட்டறிந்தார். தூதரகத்தின் சமூக நலக் குழுவின் மூலம் நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ளது.
