ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஒடிசா எஃப்சி அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து அசத்தியது. 48-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் கோல்கீப்பர் அம்ரிந்தர் சிங் தனது பகுதியில் இருந்து புய்தியாவுக்கு பந்தை தட்டிவிட்டார். ஆனால், அவர் அதை கலெக்ட் செய்யவில்லை. அப்போது விரைந்து செயல்பட்ட சென் னையின் எஃப்சி அணியின் கானர் ஷீல்ட்ஸ் பந்தை அற்புதமாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் கட் செய்தார். அதை 6 அடி தூரத்தில் பெற்ற வில்மர் ஜோர்டான் கோல் வலையின் மையப்பகுதியில் திணித்தார். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என முன்னிலை வகித்தது.
53-வது நிமிடத்தில் கானர் ஷீல்ட் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்று பாக்ஸ் பகுதியின் மையப்பகுதிக்குள் வில்மர் ஜோர்டானுக்கு தட்டி விட்டார். அதை அவர், கோல் வலையின் மையப்பகுதியில் செலுத்த சென்னையின் எஃப்சி அணி 2-0 என முன் னிலை பெற்றது. 80-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் டியாகோ மௌரிசியோ உதவியுடன் பந்தை பெற்ற டோரி கோல் கம்பத்துக்கு நெருக்கமாக இருந்தபடி அடித்த ஷாட் கோல் வலையின் வலது புற கார்னரை துளைத்தது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 5-வது நிமிடத்தில் ஒடிசா அணியின் டியாகோ மௌரிசியோ அடித்த ஷாட் கோல்கம்பத்தின் மையப்பகுதி கம்பி மீது பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.
ஆனால் அடுத்த 3-வது நிமிடத்தில் டியாகோ மௌரிசியோ கோல்கம்பத்துக்கு நெருக்கமாக நின்றபடி பை-சைக்கிள் கிக் செய்தார். அப்போது பந்து கோல்கம்பத்தின் கம்பி மீது பட்டு அருகில் நின்ற சென்னையின் எஃப்சி அணியின் கோல்கீப்பர் நவாஷ் முகமது காலில் பட்டு சுயகோலாக மாறியது. இதனால் சென்னையின் எஃப்சி அணி அதிர்ச்சியில் உறைந்தது. முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.