சசிகுமார் நடித்த ‘நந்தன்’ படம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளாட்சி அரசியல் சார்ந்த யதார்த்த சூழலை பேசிய இரா.சரவணன், இப்படம் வெளியாகி 2 ஆண்டு ஆனதை அடுத்து, ‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார்.
இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
“சமூக அக்கறை கொண்ட முக்கியமான பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ‘நந்தன்’ முதல் பாகத்தைவிட இன்னும் அழுத்தமான படைப்பாக இப்படம் இருக்கும். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான விவரங்கள், விரைவில் வெளியிடப்படும்” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.














