குமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவராக இருந்த புலவர் செல்லப்பா நினைவஞ்சலி நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார்.
அப்போது, “டெல்லியில் நடந்த போராட்டத்துக்கு பிறகு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி கொடுத்துள்ளது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவிலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வாரி புனரமைக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நல்ல மாற்றுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கோடை காலத்தில் அனைத்து குளங்கள், கால்வாய்களை தூர்வாரி புனரமைக்க வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், பாசனத்துறை தலைவர் வின்ஸ்ஆன்றோ, அகில இந்திய மீனவ மக்கள் வளர்ச்சி இயக்க அறக்கட்டளை நிறுவனர் சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.