Home மாநில செய்திகள் தமிழகத்தில் ஏப்.5-ம் தேதி வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் ஏப்.5-ம் தேதி வரை மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

0

வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் வரும் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவியது. இதனால், சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. தற்போது, வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இன்று (ஏப்.2) முதல் வரும் 5-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, வரும் 3-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 4, 5-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழைப் பொழிவால் வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version