கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி தேர்வில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஆசிரியர்கள் முதல்வர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் (பிஆர்டி) காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 2024-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 2,850 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியிலும் சேர்ந்துவிட்டனர்.
ஆனால், இதே தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு வரை கலந்து கொண்ட நிலையிலும், ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தேர்வர்கள் ஒன்றிணைந்து, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தேர்வர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கூட்டமைப்பு சார்பில் தாம்பரம் உதயராணி, அண்ணா நகர் சுபாய் யாதவ் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024-ல் நடைபெற்றது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை மட்டும் ஏன் நிரப்பவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.
இந்த பணியிடங்கள் கடந்த 16 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த சூழலில், புதிதாக பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
2024 வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்கள், கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். இப்போது வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் என பலரை பார்த்தும், இதுவரை பதில் இல்லை. எனவே, ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
