குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை மறுநாள் 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இன்று எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 4:30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் திருவீதி உலா, நண்பகல் 12:30 மணிக்கு நடுவூர்கரை சிவ சக்தி திருக்கோவில் பக்தர்களின் மாவிளக்கு பவனி, மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை போன்றவை நடைபெற்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பலர் அருகில் உள்ள தோப்புகளில் குடும்பத்துடன் அமர்ந்து பொங்கலிட்டனர். மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்ததால் பொங்கலிடும் பகுதி, கோயில் வளாகம், கடற்கரை பீச் சந்திப்பு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.