குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி கொடை விழா தொடங்கியது. ஐந்தாம் நாளான நேற்று இந்திய அரிய வகை மணல் ஆலை தொழிலாளர்கள் சார்பில் சந்தனக் குடம் பவனி மற்றும் தேர் மாலை ஊர்வலம் போன்றவை நடைபெற்றன. ஆறாம் நாளான இன்று மாசிக் கொடை விழாவின் முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலிய படுக்கை பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது. வலிய படுக்கை என்பது அம்மனுக்கு மிகவும் பிடித்தமான உணவு பதார்த்தங்கள், கனிவகைகள் ஆகியவற்றை அம்மன் முன்பு பெரும்படையலாக படைத்து வழிபடுவதாகும். இந்த வலிய படுக்கை பூஜை மாசி கொடையின் ஆறாம் திருவிழா, பரணிக்கொடை மற்றும் கார்த்திகை மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருடத்தில் மூன்று முறை மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவார்கள்.