மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் உத்தரவுப்படி குளச்சல் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அகஸ்தீஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் ஆகியோர் திருவிழாக் கடைகள் மற்றும் பெரிய சக்கர தீவெட்டி கமிட்டியின் அன்னதானக் கூடத்தையும் இன்று 4-ம் தேதி ஆய்வு செய்தனர்.
அன்னதானக்கூடத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், ஊறுகாய் உட்பட அனைத்து உணவு பொருட்களிலும் உணவு மாதிரி எடுத்து பராமரிக்கவும், உணவு பரிமாறும் பணியாளர்கள் தலை உறை, கையுறை உள்ளிட்ட தற்காப்பு சாதனங்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து தற்காலிக கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ் பெறவும் வலியுறுத்தப்பட்டது. ஆய்வின்போது, அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட 12 கிலோ உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.