பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தங்கேஸ்வரன் (40). இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்த குமாரி தங்கம் என்பவரின் மூத்த மகளை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜேஷ் (32) என்பவர் திருமணம் செய்துள்ளார். குமாரி தங்கம் குடும்ப சொத்தை பங்கு பிரிவினை செய்யாமல் அனுபவித்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆனந்த ராஜேஷ் மாமியாரின் தோட்டத்தில் உள்ள தேங்காயை வெட்டி எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து குமாரி தங்கம் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து தனித்தனியாக விசாரித்து அனுப்பி வைத்தனர். அப்போது போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த தங்கேஸ்வரனை ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஆனந்த ரதிஷ் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க வந்த மாமியார் தங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீ கிருஷ்ணன், ஆனந்த ரதிஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.