மதுரை அருகே விசாரணைக்கு வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை

0
16

மதுரை அருகே விசாரணைக்கு வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை செய்ததாக போலீஸ் கூறுவதில் உண்மை இல்லை, அவர் அடித்து கொல்லபட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன். தனியார் டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான ஈச்சர் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 3-ம் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, வாலாந்தூர் கண்மாய் கரை அருகே வாகனம் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இச்சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 113/2026-ன் கீழ், தீ விபத்து தொடர்பான சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை தொடர்பாக, சம்பவத்திற்குத் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கும், விசாரணைக்கு உதவுவதற்கும் பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

முதற்கட்ட தகவலின்படி, காவல் ஆய்வாளரின் அறையில் இருந்த அவர், கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அப்போது, காலை 6 மணியளவில் கழிப்பறைக்குள் தூக்கிட்ட நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாகத் காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்தாரா அல்லது போலீஸார் தாக்கியதில் இறந்தாரா என, உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, எஸ்பி தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரிக்கின்றன. இருப்பினும், இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சம்பவத்தின்போது பணியில் இருந்த காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here