Home மாநில செய்திகள் திருப்பரங்குன்றத்தில் தவெக பிரமுகரின் மதுக்கூடத்தை ஒட்டிய மதுக்கடை மீண்டும் திறப்பு

திருப்பரங்குன்றத்தில் தவெக பிரமுகரின் மதுக்கூடத்தை ஒட்டிய மதுக்கடை மீண்டும் திறப்பு

0

திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில் காவல் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. தவெக பிரமுகரின் பாரையொட்டி உள்ள இந்த டாஸ்மாக் கடை விதிமுறையை மீறி திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். அதன்படி கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் 3 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் அருகிலுள்ள கடை (எண் 5556) மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. வைகாசி விசாகத்தையொட்டி நேற்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். இந்நிலையில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி டாஸ்மாக் மதுக்கடையை திறந்ததால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

திருப்பரங்குன்றம் தொகுதி தவெக எம்எல்ஏவும், அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் அதிமுகவைச் சேர்ந்த செல்வம் என்பவர் சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். அவர் நடத்தும் மதுக்கூடத்துக்கு (பார்) அருகில் உள்ள டாஸ்மாக் கடையை விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், கடையின் ஊழியர்கள், ‘இந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உரிய ஆணை வரவில்லை. அதனால்தான் திறந்து மது விற்பனையில் ஈடுபடுகிறோம்’ என்று கூறினர்.

எனினும், வைகாசி விசாகத் திருவிழாவின்போது மதுக்கடையை திறந்து வைத்தது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். பக்தர்களின் எதிர்ப்பு அதிகரித்ததை அடுத்து, பிற்பகலுக்குப் பின்பு கடையை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பின்பு மதுக்கடை அடைக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version