பழநி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய நபரான வழக்கறிஞர் அன்வர்தீனின் திடீர் உயிரிழப்பால் சிபிசிஐடி போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரப் பகுதியில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்தது தொடர்பாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், இதுவரை ஜஸ்டின் மணிகண்டன் (தற்போது உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ), அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, பத்திரம் தயார் செய்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கூடுதல் தகவல்களை சேகரிக்கும் விதமாக கைது செய்யப்பட்ட வெள்ளத்துரை, சேதுபதி அன்வர்தீன் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி போலீஸார், கடந்த 5-ம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். நேற்று மாலை போலீஸ் காவல் முடிந்த நிலையில், மதுரை மருத்துவமனையில் உடல்நலம் குறித்த பரிசோதனைக்கு பிறகே அன்வர்தீன் உள்பட 4 பேரும் மாலை 6 மணிக்கு மேல் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இரவு 10:30 மணிக்கு மேல் அன்வர் தீனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சிறை அலுவலர்கள் உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். போலீஸ் காவலில் விசாரணையில் இருந்த போது தினமும் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது.
பழநி கோயில் நிலம் மோசடிக்கு தேவையான பல்வேறு ஆவணங்களை வழக்கறிஞர் அன்வர்தீன் தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 ஆண்டுக்கு மேலாக அந்த கோயில் இடம் குறித்த ஆவணங்களை கையாளுவதிலும், அந்த இடம்குறித்த வழக்கு தொடர்பான நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவருக்கு கடந்த பத்தாண்டாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்த நிலையில், வாத (ஸ்ட்ரோக்) நோயாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில்தான் பழநி கோயில் இடம் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் அன்வர்தீன் கைது செய்யப்பட்டார். கோயில் நில மோசடி வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென மதுரை சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது உயிரிழப்புக்கு வேறு காரணம் இருக்குமா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
அன்வருதீன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு நேற்று இரவே சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை அவரது குடும்பத்தினர் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
முக்கிய வழக்கில் கைதாகி அன்வர்தீன் உயிரிழந்து இருப்பதால் அவரது உடல் பரிசோதனையை மூன்று நீதிபதிகள் முன்னிலையில் மருத்துவக் குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர். உடல் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்து இருப்பதாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அன்வர்தீன் உயிரிழப்பு குறித்து மதுரை கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.















