கோதையாறு அருகிலுள்ள குற்றியாறு பகுதி அரசு ரப்பர் கழக தோட்டங்கள் நிறைந்ததாகும். இந்த பகுதியில் ரப்பர் பால்வடிப்பு தொழிலாளர்களின் குடியிருப்புகள், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளன. சுற்றுலா தலமும் ஆகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு உள்ள குடியிருப்பு அருகில் யானைகள் தென்னைகள் மற்றும் மரங்களை வேரோடு சாய்த்து துவம்சம் செய்துள்ளன. குடியிருப்பு வாசிகள் மறைந்து நின்று பார்த்த போது இரண்டு யானைகள் செய்யும் அட்டகாசத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீபந்தம் கொளுத்தி சத்தங்கள் எழுப்பி யானைகளை துரத்தினர். நேற்று இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.