குமரி மாவட்டத்தில் இருந்தும், குமரி மாவட்டம் வழியாகவும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரெயில் நேற்று காலை வழக்கம்போல் டவுன்ரெயில் நிலையத்தில் நின்றது.
அப்போது ரெயிலில் முன்பதிவு அல்லாத பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு அரிசி மூடைகள் கிடந்தன. அவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயிலில் சோதனை செய்தபோது அங்கு சுமார் 70 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றையும் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
நேற்று ஒரே நாளில் வெவ்வேறு ரெயில்களில் மொத்தம் 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதை கடத்தி வந்த மர்ம ஆசாமிகள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.