இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் பாரிமுனையில் இயங்கி வந்த பேருந்து நிலையம், மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய்த் திகழ்ந்த கொத்தவால்சாவடியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கு தீர்வுகாண கோயம்பேட்டில் ரூ.103 கோடியில் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அதிமுக அரசால் திறக்கப்பட்டது.
கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி பேருந்து நிலையப் பணிகளை தொடங்கி வைத்தேன்.
இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் இயக்கப்படுவது என்றும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்குவது என்றும், மாதவரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்தத் திட்டங்களை நாசப்படுத்தி, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை திறந்து, அங்கிருந்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கியது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை முழுவதுமாக முடக்கியது.
திமுக அரசின் அலட்சியத்தால், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்பாரற்று சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தற்போது கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் இல்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோயம்பேடு பேருந்து நிலையத்தைப் போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, ஜெயலலிதா ஆட்சியில் திட்டமிட்டதுபோல், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளையும், நகரப் பேருந்துகளையும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
