பூம்புகாரில் ஆழ்கடலில் ஸ்கூபாடைவ் அடித்து 3-ம் கட்ட அகழாய்வு பணியை பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கிவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டறியும் வகையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 2025 மற்றும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 கட்டங்களாக கடல்சார் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டிடங்கள், சுற்றுச்சுவர், சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள், பானை ஓடுகள்,செங்கற்கள் கண்டறியப்பட்டதுடன், 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி பூம்புகார் கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் ஆழ்கடல் பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்று தொடங்கின. தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர், ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் முறையில் இறங்கி 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கிவைத்து, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, கடல்சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் யதீஷ்குமார், ஓய்வுபெற்ற இணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் துறை அலுவலர் வசந்தகுமார் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் என 25 பேர் கொண்ட குழுவினர், ஒரு விசைப்படகு, 2 பைபர் படகுகளில் அதிநவீன டைவிங் கருவிகள், நீருக்கடியில் பயன்படுத்தும் கேமரா உள்ளிட்ட உபகரணங்களுடன் கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், பூம்புகார் துறைமுகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியது: கலைப் பொக்கிஷங்கள் வரலாற்றில் பூம்புகார் தனியிடம் பெற்றுள்ளது. அகழாய்வின்போது தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், வெளிநாட்டின் பானை ஓடுகள் தென்பட்டன. பல நாடுகளின் பானை ஓடுகள் இருப்பதால், இது வணிக நகரம், பண்பாட்டு நகரம், கலைநகரம், மாபெரும் பொக்கிஷமான நகரமாக தெரிகிறது.
கடலுக்கடியில் கட்டுமானச் சுவர்கள், உறைகிணறுகள் தென்பட்டுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்ததற்கும், இங்கு வணிகம் நடந்ததற்கும் ஆதாரச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. பூம்புகாரில் கடல்சார் அகழாய்வு தொடரும்.
உலகத்துக்கே நாகரிகத்தை கற்றுத்தந்தவர்களாக தமிழர்கள் இருந்தார்கள் என்ற உண்மை வெளிவரும். சிந்து சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில், தொட்டுவிடும் தொலைவில் உள்ளோம். பூம்புகார் உலக அளவில் ஜொலிக்கும் என தெரிவித்தார்.
மேலும், “மழையில் நெல் மூட்டைகள் நனைந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் தெரிவித்தார். தவெக மாவட்டச் செயலாளர் கோபிநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கடலில் படகுப் பயணம் மேற்கொண்டதில் அமைச்சர் சோர்வடைந்ததால், தரங்கம்பாடி பகுதியில் ஆய்வு செய்யும் பணி ரத்து செய்யப்பட்டது.
