கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜிபுதியின் மகன் முகமது பாகர் (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்ட பின்னர் வீட்டின் முன் பகுதியில் உள்ள சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை இரவு 10 மணி அளவில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே வீட்டில் உள்ளவர்கள் சேர்ந்து முகமது பாகரை தூக்கி வீட்டில் படுக்க வைத்துள்ளனர். நேற்று காலை முகமது பாகர் உயிரிழந்தார். இது சம்பந்தமாக அவரின் தாய் அலி பாத்திமா (47) என்பவர் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கொல்லங்கோடு போலீசில் புகார் செய்துள்ளார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் வாலிபர் சாவில் உண்மை தன்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.