கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டிப்ளமோ படிப்பதற்காக பெங்களூர் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து படிப்பை பாதியிலே விட்டுவிட்டு தற்போது ஊரில் உள்ளார்.
வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமாகி உள்ளார். இதனை அடுத்து சிறுமியின் மொபைல் நம்பரை வைத்து லொகேஷன் பார்த்தபோது, மண்டைக்காடு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியுடன் அங்கு சில வாலிபர்களும் இருந்துள்ளனர்.
உறவினர்களை பார்த்ததும் சிறுமி உட்பட அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதற்கு இடையில் காணாமல் போன சிறுமியின் சகோதரியின் மொபைல் நம்பரில் ஒரு வாலிபர் தொடர்பு கொண்டு, போலீசில் புகார் அளிக்க கூடாது என மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் சகோதரர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் போன் வந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக சிறுமியை காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியை கருங்கல் காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியுடன் இருந்தவர்கள் யார் யார் என விசாரணை நடந்து வருகிறது.