Home தேசிய செய்திகள் திருத்தப்பட்ட மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை தாக்கல் செய்த கர்நாடகா – 8.90 லட்சம் மரங்களை...

திருத்தப்பட்ட மேகேதாட்டு அணை திட்ட அறிக்கையை தாக்கல் செய்த கர்நாடகா – 8.90 லட்சம் மரங்களை வெட்ட முடிவு

0

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்டமுடிவெடுத்துள்ளது.

இதனை தமிழக அரசு எதிர்த்துவரும் நிலையில், கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு முதற்கட்ட திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்ட தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அதனை திருத்தி வழங்குமாறு மத்திய நீர் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து கர்நாடக அரசு கடந்த ஏப்ரலில் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக இருந்ததால் கடந்த ஜூன் 29-ம் தேதி கர்நாடக அரசுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட அறிக்கையில் சில திருத்தங்களை செய்து, கர்நாடக அரசு மீண்டும் மத்திய நீர் ஆணையத்தில் சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில், “மேகேதாட்டு அணை கட்டுவதற்கு வனத்துறைக்கு சொந்தமான 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக அந்த இடத்தில் உள்ள 8.90 லட்ச மரங்களை வெட்ட வாய்ப்பு இருக்கிறது. புதிதாக கட்டப்படும் அணையில் 67.14 டிஎம்சி வரைநீரை சேமிக்க முடியும். அதில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு 4.5 டிஎம்சி பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், “மேகேதாட்டு அணை தொடர்பாக திருத்தப்பட்ட திட்ட வரைவு அறிக்கையை மீண்டும் சமர்ப்பித்து இருக்கிறோம். மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறப்படும். 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகேதாட்டு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப் படும்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version