காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்தைக் கண்டித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் காவிரியில் இங்குள்ள விவசாயிகளுக்கே தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கூறியுள்ளது. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கும் இந்த உத்தரவை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழகத்தை எதிர்த்தும், மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதிக்கக் கோரியும் நாளை (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கன்னட கூட்டமைப்பின் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
இதனால், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஆட்டோ, வாடகை கார், பேருந்துகள் ஆகியவை இயங்காது. அனைவரும் தாமாக முன்வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். எனது தலைமையில் இரு மாநில எல்லையான அத்திப்பள்ளியிலும், சுதந்திர பூங்காவிலும் போராட்டம் நடைபெறும். இதில் கன்னட ஆதரவாளர்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இயல்பு நிலை பாதிக்கப்படாது?
போராட்டத்தை கைவிடுமாறு கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதை மீறி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வாட்டாள் நாகராஜுக்கு ஆதரவு தெரிவித்த கன்னட ரக் ஷன வேதிகே, கர்நாடக தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டவை தங்களது முடிவை மாற்றி கொண்டுள்ளன.
அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இதனால், இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என தெரிகிறது. அதேவேளையில், கர்நாடகா, தமிழகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பு
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்து பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்ளிட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்றும் கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியாவில் விவசாய சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் நேற்று காலையில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்குப்பின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ”கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எங்களது தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையத்திலும் மீளாய்வு செய்ய கோரி இருக்கிறோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாற்றம்: இந்நிலையில் ராமலிங்க ரெட்டி வகித்து வந்த நீர்ப்பாசனத்துறை, மண்டியாவை சேர்ந்த செலுவராயசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
