காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நியூஸிலாந்து அணியின் சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி நாளை (24-ம் தேதி) புனேவில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து நியூஸிலாந்து அணியின் சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கேன் வில்லியம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து அவர், முழுமையாக குணமடையாததால் புனே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் இன்னும் நியூஸிலாந்து அணியுடன்இணையவில்லை அவர், இன்னும் சிகிச்சைக்கான வழிமுறைகளை தொடர்வதாகவும் அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1-ம் தேதி தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.