விளவங்கோடு தாலுகாவுக்கு உள்பட்ட மலையடி கிராமம் சாணிவிளையில் முல்லையாறு கிளைக் கால்வாயின் கரையோரம் காலியாக உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல ஆண்டுகளாக மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு என இந்த ஊராட்சியில் வேறு விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது வீடுகளுக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் இங்கு விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மைதானத்தையொட்டிய தனது தோட்டத்துக்கு செல்ல புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து மைதானத்தின் குறுக்கே கருங்கற்களால் கட்டி எழுப்பி, வாகனங்களை கொண்டு செல்லும் வகையில் பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் புறம்போக்கு நிலத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றி பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.